இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை, முதலாம் ஆண்டு மாணவர் டாக்டர் கண்ணன். இவர் இன்று (ஜூலை 20) அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இது மிகுந்த வருத்தத்தையும், மன வேதனையையும் அளிக்கிறது. அவரது உயிரிழப்பிற்கு உண்மையான காரணம் என்னவென்று தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த வேண்டும். டாக்டர் கண்ணனுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அஞ்சலி செலுத்தியது.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் அதிக அளவில் உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள்.
அதற்கான காரணங்களை கண்டறிந்து போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தொடர்ந்து 24 மணி முதல் 36 மணி நேரம் வரை பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால் மன மற்றும் உடல் உளைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள்.
எனவே, எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்குவதை கைவிட வேண்டும். மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்க வேண்டும்.
மருத்துவ மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து, சரி செய்ய அரசு சாரா அமைப்புகள் அடங்கிய 'குறை தீர்க்கும் குழு' அமைக்க வேண்டும் என, ஏற்கனவே போட்ட பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
டாக்டர் கண்ணன் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது” என அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பரிசோதனைக்கு மறுத்து காவலர்களை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்!