சென்னை: மாரடைப்பால் காலமான நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணனின் மறைவு மிகப்பெரும் அதிர்ச்சி. அனைவருக்கும் இழப்பு. அவர் நடிகர் என்பதை விட நல்ல மனிதர். குடும்பத்தில் ஒருவர் போல பேசுபவர். பொதுமக்களுக்கு தேவையானது குறித்து எப்போதும் என்னிடம் பேசுவார். கருணாநிதி மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் அன்பு கொண்டவர். படப்பிடிப்பின் போது என்னுடனே இருப்பார். அன்பாக பழகுபவர்" என கூறினார்.
அஞ்சலி செலுத்திய பின் பேசிய நடிகர் சித்தார்த், "சினிமா துறையை தமது குடும்பமாக பார்ப்பார். மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது" என்றார்.
இதேபோல் நடிகர்கள் மன்சூர் அலிகான், cool சுரேஷ், இமான் அண்ணாச்சி, இயக்குநர் பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சபாநாயகர் அப்பாவு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.