தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் சுமார் அரை நூற்றாண்டு கால தலைவராக இருந்தவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
முதலமைச்சரின் அறிவிப்புக்கு திமுகவினர் உள்பட பலர் பாராட்டும், வரவேற்பும் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓபிஎஸ்ஸும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், ”கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பதை அதிமுக சார்பில் மனதார வரவேற்கிறோம்.
என்னுடைய தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர். அவருடைய பெட்டியில் பராசக்தி, மனோகராவுடைய வசனம் இருக்கும். அவர் இல்லாத நேரத்தில் எடுத்துப் படித்துள்ளோம்.
என்னுடைய நண்பர்களிடத்திலும் சொல்லிக்கொண்டிருப்பேன். அவரது வசனத்தில் அனல் பறக்கும். பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது துணை நின்றுள்ளது” என்றார்.