தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசுகையில், இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கிறது. ஒரு தொகுதியில் (வேலூர்) தேர்தல் ரத்து செய்யப்பட்டதுள்ளது எனக்கு மன வருத்தம் அளிக்கிறது எனக் கூறிய அவர், இதன்மூலம் தேர்தலில் பணம் எவ்வளவு விளையாடுகின்றது என்பது அப்படமாகியுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தல் ரத்தானது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து பணப்பட்டுவாடா குறித்து பேசிய அவர், " பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகமாக பண நடமாட்டம் இருந்ததன் காரணமாகவே திமுக வேட்பாளர் கனிமொழியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது" என்றார். மேலும், திமுகவைச் சார்ந்தவர்கள் அதிகமான பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
அவர் மீது திமுக தலைவர் ஸ்டாலின் குறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் சொல்கின்றனர் தமிழிசை வீட்டில் "சோதனை செய்யவில்லை என்று. நான் என்னுடைய வீட்டைத் திறந்து காண்பிக்கிறேன் யார் வேண்டுமானாலும் வந்து என் வீட்டைச் சோதனை செய்யலாம்" எனச் சாவல் விடுத்தார். மேலும், வாக்குக்குப் பணம் கொடுக்கவில்லை என்று தான் பெருமையாக சொல்ல முடியும் என்றும், திமுகவால் சொல்லமுடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, "நான் நேர்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறேன். பாமர மக்களுக்கு நீண்ட நாள் உதவி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு பணம் விளையாடினாலும் நேர்மையான அரசியலை மக்கள் வெற்றியடைய செய்வார்கள். இந்த காலத்தில் ஊழலற்ற தன்மைக்கு மோடி அவர்கள் உதாரணமாக இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.