சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் இன்று (செப்.15) வெளியிட்ட செய்தி குறிப்பில், "அர்ச்சகர் பணியில் பெண்கள் வரவேற்பு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதி சார்ந்த உரிமை சமூக நிலையிலும், சட்ட ரீதியாகவும் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்தவர்கள் யாரும் அர்ச்சகராகலாம், அதற்கு சாதி தடையில்லை என்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் பல சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்ட்டுள்ளனர்.
தற்போது இந்த அர்ச்சகர் பணியில் பாலின சமத்துவம் காணும் முறையில் ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்த பெண்கள் மூன்று பேர் க.ரம்யா, சி.கிருஷ்ணவேணி மற்றும் ந.ரஞ்சிதா ஆகியோர் அர்ச்சகர்களாக நியமனம் பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அர்ச்சகர் பணி நியமனம் பெற்றுள்ள பெண் அர்ச்சகர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவிப்பதுடன்.
பெண்களை ஒதுக்கி வைத்து தாழ்வுபடுத்தி, கோயில் கருவறைக்குள் நுழைவதை தடுத்து வரும் சனாதன கருத்துக்களை நிராகரித்து சமூக நீதி உரிமைகளை நிலை நாட்டுவதில் உறுதி காட்டி வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்று, நன்றி பாராட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.
அர்ச்சகர்களான பெண்கள்: அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்க திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் ஒரு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
அந்த அர்ச்சகர் பயிற்சி மையத்தில் சேருபவர்களுக்கு ஓராண்டு பயிற்சியில் ஆகமங்கள், கோயில்களில் பூஜைகள் எப்படி செய்யப்பட வேண்டும், மந்திரங்களை எப்படி ஓத வேண்டும் என்ற பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே பயின்று வந்த நிலையில், தற்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யா, கிருஷ்ணவேனி மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதா ஆகிய மூவரும் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்று அதில் தேர்ச்சியும் அடைந்துள்ளனர்.
கோயில் பணிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகமும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு மட்டுமே முன்னுறிமை அளித்து வந்த நிலையை உடைத்தெரிந்து தற்போது அனைத்து சமூகத்தினர், அதிலும் குறிப்பாக மூன்று இளம் பெண்கள் கோயில் அர்ச்சகர்களாக பணியமர்த்தபடவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.