சென்னை: பூந்தமல்லி காசநோய் மருத்துவமனையை இன்று (ஜூன் 19) காலை ஊழியர்கள் திறக்க வந்தபோது, மருத்துவமனை வளாகத்தின் வராண்டா பகுதியில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து பூந்தமல்லி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து ஆய்வுசெய்தனர்.
அதில் இறந்து கிடந்தது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தது யார்? இறந்து கிடப்பவர் யார்? என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கட்டுமான பணியில் ஈடுபடும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் போல் இருப்பதால், இது குறித்து கட்டுமான பணியில் ஈடுபடுபவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து குடிபோதையில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். மருத்துவமனை வளாகத்தின் முன்பகுதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் முன்விரோதம்: ஊராட்சித் தலைவரின் கார் உடைப்பு