சென்னை: விஷச் சாராய உயிரிழப்பு குறித்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். இந்நடவடிக்கைக்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் எதிர்ப்புத் தெரிவித்து வெளிவந்துள்ள கட்டுரையில், ''அரசியல் தெளிவு வரலாறுகள் அறியாத ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு, அவர் செய்யும் அலப்பறைகள் அளவு கடக்கின்றன. விஷச்சாராயம் உயிரிழப்பில் அரசியல் நடத்திட சில அரசியல் ஆத்திரக்காரர்கள் முற்பட்டுள்ள நிலையில் ஆளுநர் ரவியும் துயரச் சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார்.
விஷச்சாராயம் உயிரிழப்பில் அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்பதில் தவறு இல்லை, அறிக்கை கேட்டவிதம் தான் அவர் எத்தகைய விஷமத்தனத்தோடு விஷம் கக்கியுள்ளார் என்பதை வெளிப்படையாக்குகிறது. நடந்தவை குறித்து முழு விவரங்களை அரசின் மூத்த அதிகாரியை தொலைபேசியிலோ, நேரிலோ அழைத்து அறிந்து கொள்ள ஆளுநரால் முடியும்.
ஆனால், அப்படி செய்யாது அதனை ஒரு அறிக்கையாக வெளியிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி தான் ஏதோ பெரிய செயலை செய்து விட்டது போல் நடந்துகொள்ளும்விதம், ஆளுநரின் நெஞ்சமெல்லாம் எவ்வளவு வஞ்சம் உள்ளது என்பதை உணர்த்துகிறது. விளக்கம் என்ற பெயரில் அவர் கேட்டுள்ள சில கேள்விகள் அவரது அரசியல் தெளிவற்ற தன்மையின் மொத்த வெளிப்பாடு மட்டுமல்ல. திமுக அரசை நோக்கி பாய்ந்து எழுப்பியுள்ள ஒவ்வொரு கேள்வியும் அவரது எஜமானர்கள் மேற்பார்வையில் நடக்கின்ற குஜராத் அரசையும் தாக்கி கடித்து உதறும் என்பதை அறியாமல் அசட்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களே அங்குள்ள ஆளுநர்கள் பாஜக அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டார்களா? என்பதைக் கேட்டு அறிந்திருக்க வேண்டாமா?
மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு விஷச்சாராயத்துக்கு 42 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், பலர் கண் பார்வையை பறி கொடுத்ததாகவும் வெளிவந்த செய்திகள் ஆளுநர் ரவிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். 2000 பேரை ஏன் கைது செய்ய வேண்டும் என குஜராத் ஆளுநருக்கு ஒரு தொலைபேசி போட்டு கேட்டிருந்தால் அவர் விளக்கி இருப்பார்.
ஒருமுறை சூடு பட்ட பூனை கூட மீண்டும் அந்த காரியத்தை செய்யத் தயங்கும். ஆனால் ஆளுநர் ரவி தான் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்கும் காரியங்களில் ஈடுபடாது எப்போதும் சிறுபிள்ளைத்தனத்தோடு செயல்பட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகிறார். ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால் தனது பதவியை துறந்து, அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தில் பாஜக தலைவராகிவிடலாம். அதை விடுத்து தாறுமாறாக செயல்பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதியை சீரழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது’’ என முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்