கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாகத் திகழ்கிறது. 152 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்திக் கொள்ளக் கடந்த 2014இல் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையைக் கண்காணித்துப் பராமரிக்க மூவர் குழுவை அமைத்தது. இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத் தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். உறுப்பினர்களாகத் தமிழ்நாடுப் பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகரன், கேரள மாநில கூடுதல் செயலர் அசோக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக வல்லக்கடவு பாதை வழியாக அணைக்கு வந்த மூவர் குழுவினர் பெரியாறு அணை, பேபி அணை, காட்சியகம் பகுதி, மதகுப்பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவு நீர், மழையின் அளவு, அணைப் பாதுகாப்பு, அணையின் உறுதித் தன்மை குறித்தும் மூவர் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இன்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் மழைக்காலத்தில் அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே பெரியாறு அணைக்குச் செல்லும் வல்லக்கடவு வழிப்பாதையைச் சீரமைப்பது, அணைப் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுப்பது, பேபி அணையைப் பலப்படுத்திய பின் 152 அடி வரை நீர்த் தேக்க நடவடிக்கை எடுப்பது, கடந்த நான்காண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டுத் தேக்கடியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தமிழன்னை படகு இயக்க அனுமதி வழங்குவது போன்ற கோரிக்கைகள் இக்குழுவில் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடு விவசாயிகள் உள்ளனர்.