தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் நோய் அந்நோயை தொற்று நோயாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்களின் விவரத்தை அனைத்து மருத்துவமனைகளும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) நோய் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற வதந்தி பரப்பப்படுகிறது. இது புதிய நோய் அல்ல, ஏற்கனவே இருந்த நோய்தான்.
தற்போது வரை கருப்பு பூஞ்சை நோயால் ஒன்பது நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் ஏற்கெனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இரண்டு பேர் எந்தவிதமான நோய் அறிகுறியும் இல்லாதவர்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நாேய்க்கு கூடுதலாக 50 ஆயிரம் மருந்துகள் வாங்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியில் கருப்பு புஞ்சை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் யாரும் இறக்கவில்லை. அதனால் கருப்பு பூஞ்சை தொற்று குறித்த வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் " என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: 'கரோனாவுக்கு போட்டியாக புதிய நோய்' - கொள்ளை நோயான மியூகோர்மைகோசிஸ்