சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன்(35). திமுக நிர்வாகியான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(30), இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் இருந்த தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஓடி வந்து சரோஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த மூன்று பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் டிப்டாப்பாக வரும் வாலிபர் ஒருவர் போன் பேசியபடியே சர்வ சாதாரணமாக நடந்து வந்து, கண்காணிப்பு கேமரா இருக்கும் இடத்தில் முகத்தை மறைத்தபடி அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவதும், பின்னர் கத்தியோடு ஓடும் காட்சிகளும், பின்னாலே பெண் ஒருவர் துரத்தி வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த விருகம்பாக்கம் போலீசார், வடபழனியில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த குற்றவாளியை கைது செய்தனர்.
அவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்த்(27) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், 8ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர் சினிமா மோகத்தில் சென்னைக்கு வந்து, கடந்த 2016 முதல் சினிமா துறையில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். வடபழனி பகுதியில் நண்பர் அறையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக குடியேறிய அவர் கடந்த 1 மாதகாலமாக வேலை சரியாக கிடைக்காததால், கொள்ளையடித்து பணம் சம்பாதிக்க தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
சினிமாவில் வரும் கொள்ளை காட்சிகளை வைத்து கொள்ளையடிக்கலாம் என ஐடியா வந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக வழக்கறிஞர்கள் வீட்டில் அதிகமாகப் பணம் இருக்கும் என்ற அடிப்படையில் வழக்கறிஞர்கள் வீடாக தேடியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் விருகம்பாக்கம் பகுதியில் வழக்கறிஞர் முருகன் வீட்டில் உள்ளே நுழைந்து நகை, பணத்தை கொள்ளை அடித்ததாகவும் திருடி கொண்டிருக்கும் போதே அவரது மனைவி வந்ததால் கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் சிசிடிவி காட்சிகள் வெளியானதை அறிந்து கொண்ட அவர், போலீஸிடம் சிக்காமல் இருக்க தனது மேக்கப் திறமை மூலம் மாறுவேடத்தில் திரிவதற்காக, மொட்டை அடித்துக் கொண்டு முக அமைப்புகளை மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சார்ஜா டூ கோவை.. மலக்குடலுக்குள் தங்கம் கடத்தல்..