சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றார் போல் பயிற்சிகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் பல்வேறு பயிற்சிகளானது ஒவ்வொரு துறை சார்ந்தும் கொடுக்கப்படுகிறது. அந்தவகையில் இன்றைய தினம் புதிய ஒப்பந்தமானது கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச்செயலகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொழில்நுட்ப மையங்களாகத் தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தற்போது 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை '4.0' தர நிலையத்தில் நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜி (TATA Technologies) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழில் நிறுவனங்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இணைந்து ரூ.2,877 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு நவீன தொழில்நுட்ப மையமாக உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ரோபோட்டிக்ஸ், இன்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுஃபேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுஃபேக்சரிங், இன்டஸ்ட்டிரியல் பெயின்டிங், அட்வான்ஸ்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளன.