கோயம்பேடு மார்கெட், பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஏராளமான புகார்கள் உள்ளன. இந்நிலையில் நெற்குன்றம் அன்னம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று அதிகாலை அங்கு சென்ற காவல்துறையினர் , சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜேஸ்வரி (58) அவரது மகன் பாலமுருகன்(37) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கடற்கரை சத்யா நகர் பகுதியில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்துள்ளது தெரியவந்தது. நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை வீட்டிற்கு அழைத்து ''கஞ்சா பார்ட்டி" நடத்தி நூதன முறையில் ரூ. 100 முதல் ரூ. 200 வரை பணம் வசூல் செய்துள்ளனர். கஞ்சா வாடை அதிகம் வரவே அக்கம்பக்கம் உள்ளவர்கள் புகார் அளித்ததின் பேரில் தற்போது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: புதுச்சேரியில் கஞ்சா விற்பனை - மஃப்டியில் வந்து மடக்கிய போலீஸ்!