சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள வடியாங்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது இளைய மகன் மணிகண்டன். இவர் 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயில் என்ஜினை கோவிந்தன் என்பவருக்கு விற்றதாகவும், அதற்கு முன்பணமாக கோவிந்தன் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிகண்டன் மீதித் தொகையை திரும்ப கேட்டபோது, அவரை கொலை செய்து விடுவதாக கோவிந்தன் மிரட்டியதாக கோவிந்தம்மாள் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை 3ஆம் தேதி பணத்தை திரும்ப கேட்க சென்ற தன் மகனை கோவிந்தனும் அவரது நண்பர்களும் சேர்ந்து தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மத்திய படைகளை தமிழக காவல்துறையை மிரட்டிப் பார்க்கிறார்களா? - கே.எஸ்.அழகிரி கேள்வி!
இந்த நிலையில், கொலை செய்த குற்றவாளிகளுடன் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் கூட்டு சேர்ந்து கொண்டு, தனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தன்னிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாகவும், தற்கொலை என கூறி வழக்கை முடித்து வைத்ததாகவும் மனுவில் அவர் தெரிவித்து உள்ளார்.
எனவே, தனது மகன் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது கோவிந்தம்மாள் தரப்பில் வழக்கறிஞர் இ.பார்த்திபன் ஆஜராகி வாதிட்டார்.
இதனை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், மணிகண்டன் இறப்பதற்கு முன்பான தகராறு, அவரது உடலில் கத்தியால் உள்ள ஆழமான காயங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது தற்கொலை மரணமாக தெரியவில்லை எனக் குறிப்பிட்டார். மணிகண்டன் மரணம் தொடர்பாக திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை, விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.