பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு அறிவித்தது.
இருந்தபோதிலும், மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற கணக்குப்பதிவியல், புவியியல், வேதியியல் ஆகிய தேர்வுகளை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதமுடியாமல் போனது. இதனையடுத்து, அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு வைக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மறுதேர்வு இன்று(ஜூலை 27) நடைபெற்றுவருகிறது.
தேர்வெழுதும் 32,000 மாணவர்களுக்கான கேள்வி தாள்கள் தயார் செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், மறுதேர்வு எழுதுவதற்கு பள்ளி மாணவர்கள் 171 பேர், தனித் தேர்வர்கள் 572 பேர் என, மொத்தம் 743 மாணவர்கள் மட்டுமே ஹால் டிக்கெட்டைப் பெற்றனர். மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் படித்த பள்ளியிலேயே 289 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னை மாவட்டத்தில், பள்ளிகளில் படித்த 9 மாணவர்கள் 9 தேர்வு மையங்களிலும் 94 தனித்தேர்வர்கள் 11 மையங்களிலும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. தனித்தேர்வர்களுக்கு ஒரு அருகிலுள்ள பள்ளியைத் தேர்வு மையமாக அறிவித்திருந்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று தேர்வு எழுத வரவில்லை. இதனால் தனித்தேர்வர்களுக்கு உரிய மையத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் எப்போது தேர்வு எழுத வருவார்கள் என காத்துக்கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டது.
மறுதேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் விரைவாக திருத்தப்பட்டு, 30ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 43 உலக நாடுகளை சுற்றி வந்த முதல் இந்திய தமிழ் பெண்!