சென்னை: வாரணாசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாசலின் ஒரு பகுதியை சமீபத்தில் உச்சநீதிமன்றம் சீல் வைக்க உத்தரவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியதாக கூறி, இத்தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கூறுகையில், "உணவின் அடிப்படையிலும் உடையின் அடிப்படையிலும் உணர்வின் அடிப்படையிலும் இந்தியாவில் வன்முறை பதற்றத்தை பாஜக, ஆர்எஸ்எஸ்,மற்றும் இந்துத்துவா அமைப்புகள் உருவாக்குகின்றனர். இதனை தடுக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுத்து தடுக்கவில்லை.
இலங்கையில் எப்படி சிங்கள அரசு ஒரே நாடு, ஒரே ஆட்சி, ஒரே மொழி,ஒரே சட்டம் என இலங்கையை கட்டமைக்க நினைத்தார்களோ அதேபோல் இந்தியாவிலும் இந்துப் பெரும்பான்மை தத்துவத்தை முன்வைக்கின்றனர். எனவே இவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. இருவரும் ஒன்றுதான்.பாஜகவினருக்கு இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை., ஈழ தமிழர்களுகாக நீலிக்கண்ணீர் வடிப்பதை எப்படி நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம்?...அண்ணாமலை உட்பட பாஜகவினர் ஈழத்தமிழர்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசுவது கபட நாடகமாக தான் நான் பார்க்கிறேன்.
தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் " என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தியை ஆய்வு செய்த மத்திய அமைச்சர்!