சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று தேர்வு எழுதிய 1,53,233 தேர்வர்களின் 21,543 பேர் மட்டுமே தகுதிப் பெற்றுள்ளனர். இவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் அரசுப் பள்ளிகளில் பணிக்கு செல்வதற்கு தனியாக நடத்தப்படும் போட்டித் தேர்வினை எழுதி தேர்ச்சிப்பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதித் தேர்வு தாள் ஒன்று, கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வினை 1,53,233 எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 7.12.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் 21,543 தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வர்களுக்கான விவரங்களை சரி பார்த்து அளிப்பதற்கும் அவகாசம் வழங்கியது. அதன் அடிப்படையில் தேர்வுகளில் மதிப்பெண் சான்றிதழ் பட்டியல் மற்றும் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.