சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு, சென்னைவாசிகள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால், மெட்ரோ ரயிலில் நேற்று (அக். 20) ஒருநாளில் மட்டும், 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயணம் செய்து உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 லட்சம் பேர் பயணம்: சென்னையில், மெட்ரோ ரயிலில் கடந்த இரண்டு நாட்களில் (அக்.19, 20) மட்டும் 7 லட்சத்து 4 ஆயிரத்து 665 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி 3 லட்சத்து 43 ஆயிரத்து 922 பயணிகளும், அக்டோபர் 20ஆம் தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 743 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணித்து உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான பயணிகளின் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 28 ஆயிரத்து 21 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 20 ஆயிரத்து 423 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 18 ஆயிரத்து 375 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 18 ஆயிரத்து 113 பயணிகளும் பயணம் செய்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இன்று சேவை நீடிப்பு: வார இறுதி நாட்களுடன் சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இந்நிலையில், முக்கிய பேருந்து நிலையமான கோயம்பேடு, சென்னை சென்டரல், சென்னை எழும்பூர் ரயில் நிலையம், மற்றும் விமான நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் இரவு நேர பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றுக்கு செல்வார்கள்.
இதனால், கூட்ட நெரிசலை தவரிப்பதற்காக, சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நீட்டிக்கபட்டு உள்ளது. அதாவது குறிப்பாக, இன்று (அக். 21) இரவு 8 மணி முதல், 10 மணி வரை (2 மணி நேரங்கள்) கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதாவது 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விம்கோ நகர் - சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வழித்தடத்தில் வழக்கமாக 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள், கூட்ட நெரிசலை தவிப்பதற்காக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க: கோவையில் 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் - ஏன் தெரியுமா?