சென்னை: ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் விதமாக 'அக்னிபாத் ' என்ற புதிய திட்டத்தை ஜூன் 14 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் இந்த பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் கடுமையான போராட்டம் நடத்தி வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரயில்களை தீயிட்டு கொளுத்தினர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப் பிரதசேம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ராணுவத்தில் சேரத் தயாராகும் பயிற்சி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணுவத்தில் சேருவதற்காக விண்ணப்பித்திருக்கும் ஆரணி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்துள்ள இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, போராட்டம் தொடர்பான தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதேபோல அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் நடத்தி வரும் திடீர் போராட்டத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில், நேற்று (ஜூன்.17) தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் ரயில்களில் தீவைப்பு சம்பவம் நடந்தது. இதனால் வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பி விடப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களிலும், தண்டவாளங்களிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: தெலங்கானா வன்முறையில் உயிரிழந்த இளைஞர் யார் தெரியுமா...?