சென்னையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்யுமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு அவ்வப்போது கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் உள்ள ஒரு கிளப்பில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, புனித தோமையர்மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் குழுவினர், அந்த கிளப்பை சோதனை செய்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்த காவல் குழுவினர், அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.26,000 மற்றும் 30 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, 33 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளா லாட்டரி சீட்டு விற்ற விசிக நிர்வாகி உத்தமபாளையத்தில் கைது