சென்னை: கடந்த 2014ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் ஒன்றை அளித்தது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் தெரிவித்தது. குறிப்பாக 2007 மற்றும் 2011, 2012 ஆகிய காலகட்டங்களில் பங்குகள் முறைகேடாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.
ரூ.100 கோடி அபராதம்: இந்த விவகாரத்தில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் மும்பை ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநருமான எம்ஜிஎம் மாறன் என்கிற நேசமணி மாறன் முத்து உடந்தையாக இருந்ததாகவும் ரிசர்வ் வங்கி புகார் அளித்தது.
இதனடிப்படையில் அமலாக்கத்துறை ரூ.608 கோடி அளவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பங்குகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்கூறி, ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை செய்ததில் ஃபெமா FEMA எனப்படும் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மைச்சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி ரூ.100 கோடியும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ரூ.17 கோடியும் அபராதம் விதித்துள்ளது.
'அபராதத்தைச் செலுத்தத் தவறினால் சொத்துகள் முடக்கம்': தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன், சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதால், ரூ.35 கோடி அபராதத்தை அமலாக்கத்துறை அவருக்கு விதித்தது. குறிப்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தை மீறி பங்குகளை ஒதுக்கியது உறுதியானதால், இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டனர். அபராதத் தொகை செலுத்த தவறினால் அடுத்தகட்டமாக சொத்துகளை முடக்கும் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கை பாயும் என அமலாக்கத்துறை எச்சரித்தது.
இதனையடுத்து அமலாக்கத்துறை நடத்திய தொடர் விசாரணையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.ஜி. எம். மாறன் என்கிற நேசமணி மாறன் முத்துவின் ரூ.293.91 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. அமலாக்கத்துறை விசாரணையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன்முத்து சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் முறைகேடாக பங்குகளை 2005-06 மற்றும் 2006-07 நிதியாண்டில் 5,29,86,250 SGD எனப்படும் சிங்கப்பூர் டாலராக முதலீடு செய்ததை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.
அமலாக்கத்துறை நடவடிக்கை: மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் இந்திய மதிப்பு ரூ.293.91 கோடியாகும். பிரிவு 37A (1)இன் விதிகள் அடிப்படையில், நேசமணி மாறன் முத்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவராக இருந்தபோதும், சிங்கப்பூரில் முறைகேடாக முதலீடு செய்த பணத்திற்கு ஈடான இந்திய சொத்துகளை முடக்கலாம் என்று உள்ளது. அந்த அடிப்படையில் ரூ.293.91 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் எம்.ஜி.எம் மாறன் மற்றும் எம்.ஜி.எம் ஆனந்த் தொடர்புடைய மேலும் ரூ.216.40 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. சதர்ன் அக்ரிஃபுரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உட்பட சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதுவரை மொத்தம் எம்.ஜி.எம் மாறன் மற்றும் எம்.ஜி.எம் ஆனந்த் தொடர்புடைய ரூ.510 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விவகாரத்தில் நடப்பது என்ன? - ஓர் அலசல்