சென்னை: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கல் என்ற திட்டம் முதலமைச்சரால் கடந்த தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டது.
திமுக தேர்தல் அறிக்கையில் இந்த அறிக்கை மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது எனலாம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடம் வரை இத்திட்டத்திற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என எதிர்க்கட்சியில் இருந்து அனைத்து அரசியல் வட்டாரத்திலும் பேசும் பொருளாக மாறியது.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று இத்திட்டம் நிறைவேற்ற உள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார். பின்னர் இதற்கான பணிகள் சூடு பிடிக்கத் துவங்கியது. மேலும் இத்திட்டதிற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 24 ஆம் தேதி அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட மகளிர் சேமிப்பு திட்டமும் இதே இடத்தில் தான் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக தான் இத்திட்டமும் தொப்பூரில் துவங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதியுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.
முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த இரண்டு முகாம்களிலும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து, தகுந்த ஒத்துழைப்பைத் தருமாறும் தமிழ்நாடு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.