தமிழ் மாநில காங்கிரஸின் நிறுவனரான மூப்பனாரின் 18வது ஆண்டு நினைவஞ்சலியில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில் பேசிய அவர், 'தமிழ்நாடு அரசியலில் கண்ணியத்தை கடைபிடித்தவர் மூப்பனார். அனைத்து தலைவர்களையும் தனது நட்பால் ஈர்த்தவர். ஏழை எளிய மக்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கெடுக்க வேண்டும் என நினைத்தவர் மூப்பனார். அவரது மகனான ஜி.கே.வாசன் தந்தையின் கொள்கைகளை அப்படியே பின்பற்றி கண்ணியமான அரசியல் தலைவராக இருந்து வருகிறார்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'வேதாரண்யத்தில் நடைபெற்ற அம்பேத்கர் சிலை உடைப்பைக் கண்டித்து விரைவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், அதுமட்டுமின்றி, உலக காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. மன்றம் இலங்கைக்கு உரிய வழிகாட்டலை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.