தமிழ்நாட்டில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் சோதனை அடிப்படையில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் பணியாற்ற உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அங்கன்வாடியில் அமைக்கப்பட உள்ள மழலையர் வகுப்பில் பாடம் நடத்துவதற்கு முன்பருவக் கல்வி முறையை கற்பிப்பதற்காக மாண்டிசோரி பயிற்சி முடித்தவர்கள் நியமிக்க வேண்டும்.
மழலையர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடையில்லை எனவும், அவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இதன் அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மூன்று நாட்கள் முதன்மை கருத்தாளர்களான (பிற ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள்) ஆசிரியர்களுக்கு மாண்டிசோரி கல்வி பயிற்சி ஜூன் 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 8ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் அளிக்கப்பட உள்ளது.
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகம் எழுதும் பணிகள் தற்பொழுது வேகமாக நடைபெற்றுவருகின்றன.