சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள பல்வேறுவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பருவமழைக்கு முன்னதாக முடிக்க உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிக்க மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (அக். 1) அரசு கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையாளருமான பணீந்திர ரெட்டி கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டுசென்று உடனடியாக மூட வேண்டும்.
இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கட்டடங்கள், சுவர்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள மின்சார கேபிள்கள், மின்சார கசிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களில் சாலைகளின் குறுக்கே சாய்ந்துவிழும் மரக்கிளைகளை அகற்றத் தேவையான மர அறுவை இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்டு பத்திரமாகத் தங்கவைக்க தற்காலிக முகாம்களை அமைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கழுத்தை நெரித்துள்ளீர்கள்' - விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!