சென்னை அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அலெக்சாண்டர், திமுக சார்பில் ஜோசப் சாமுவேல் போட்டியிட்ட நிலையில் தேர்தல் முடிவுக்காகக் காத்துள்ளனர்.
இந்நிலையில் கொரட்டூர் 89ஆவது வார்டு பாடி, சீனிவாசன் நகர், சக்தி தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் டோக்கன் மூலம் பணம் விநியோகம் செய்துவருவதாக திமுக நிர்வாகிகளுக்குத் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து திமுகவினர் அங்கு சென்றனர்.
இதில் இருவர் தப்பிய நிலையில் பணம் விநியோகம் செய்த இருவரைப் பிடித்து திமுகவினர் கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடமிருந்த 14 ஆயிரம் ரூபாய், டோக்கன், சிலரது முகவரி கொண்ட தாள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் திமுக வட்டச் செயலாளர் சேகர் (53) கொடுத்த புகாரின்பேரில் பணம் பட்டுவாடா செய்த வெங்கடேசன், தாமோதரன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தப்பி ஓடிய மணிகண்டன், பாபு ஆகியோரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். தகவலறிந்த திமுக-அதிமுக நிர்வாகிகள் கொரட்டூர் காவல் நிலைய வாசலில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.