சென்னை: கொளப்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் குமார், மும்பையைச் சேர்ந்த ஷரன் தம்பி ஆகிய இருவரும் செவித்திறன் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆவர். இதை மூலதனமாக வைத்து, செவித்திறன் பாதித்தோர் விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி மாற்றுத் திறனாளிகளிடம் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, தாங்கள் நடத்தும் "ஐஐசிடி" நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், 45 நாள்களில் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாக மாற்றுத் திறனாளிகளிடம் பேசி அவர்களை நம்ப வைத்துள்ளனர்.
தொடர்ந்து இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளிடம் ரூபாய் இரண்டரை கோடி பணத்தைப் பெற்றுள்ளனர்.
ஆனால், முதலீடு செய்யாமல் பணத்தை சந்தோஷ் குமார் ஏமாற்றியது சில நாள்களுக்கு முன் சிலருக்குத் தெரிய வந்துள்ளது. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பணத்தை ஏமாற்றிய சந்தோஷ் குமாரின் தாயார் ரேவதி அதிமுக மகளிர் அணியில் இருப்பதால், பணத்தைக் கேட்போரை கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்த துாத்துக்குடி, புதுகிராமத்தைச் சேர்ந்த அந்தோணி (40) என்பவர், முன்னதாக மன உளைச்சலில் உயிரிழந்துள்ளார். எனவே, இவர்கள் இருவரையும் உடனடியாகக் கைது செய்து, எங்களிடம் ஏமாற்றிய பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பலர் சென்னை கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 150க்கும் மேற்பட்ட புகார்கள்... 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை - இது பப்ஜி மதனின் லீலைகள்!