சென்னை : மற்றும் மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் என, தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி இல்லத்தில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்த சென்றுள்ளனர். னால் அங்கு அழகர்சாமியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. ரெய்டு பற்றி அறிந்து வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர் என எண்ணிய அலுவலர்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் சாவியைக் கேட்டுள்ளனர்.
அதற்கு ஊழியர்கள் தங்களிடம் சாவி இல்லை என்று கூறிய நிலையில், காலை 7 மணியிலிருந்து சுமார் 4 மணி நேரத்திருக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு காத்திருந்த அலுவலர்கள் பொறுமையிழந்தனர்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த அலுவலர்கள், “ஒழுங்காக சாவியை பெற்று தராவிட்டால், நீதிமன்ற உத்தரவைப் பெற்று பூட்டை உடைத்து வீட்டை திறந்து சோதனையிடும் நிலை ஏற்படும். இதனால் மேலும் சிக்கல்களை அனுபவிப்பீர்கள்” என்று எச்சரித்தனர். இதனையடுத்து யாரிடமோ போனில் பேசிய ஊழியர்கள், சிறிது நேரத்தில் வீட்டின் சாவியை கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
பொதுவாக வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடக்கும் இடங்கள் குறித்து முடிவு செய்துவிட்டு, ஒரே நேரத்தில் வேலையை தொடங்குவார்கள். அவ்வாறு செல்லும் போது காவல்துறையினர் துணையுடன் சோதனை நடத்துவார்கள். இதில் வீடு பூட்டி கிடந்தால் சம்பந்தப்பட்டவரை வரவழைத்து பூட்டை திறக்கச் சொல்வார்கள்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில், அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்ற உத்தரவை பெற்று பூட்டை உடைத்து, அதன் பின் சோதனையை மேற்கொள்வார்கள். இந்த வகையில், அழகர்சாமி வீட்டு வாசலில் காலை முதல் காத்திருந்த அலுவலர்கள், எச்சரிக்கை செய்த பின்னரே சாவி வந்தது. அதன் பின் பூட்டைத் திறந்து உள்ளே சென்ற அலுவலர்களுக்கு ஒரு புது அதிர்ச்சி காத்திருந்தது.
அது, வீட்டின் உட்புற கதவுகளுக்கு பூட்டு இல்லை. பதிலாக, நவீன லேசர் டெக்னாலஜி உதவியுடனான லாக் அமைக்கப்பட்டிருந்தது. முகம், கண் விழி அல்லது கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே திறக்கப்படும் வகையில் கதவு அமைக்கப்பட்டிருந்ததால், பூட்டிய கதவின் முன் அலுவலர்கள் அமர்ந்துள்ளதாக தகவல் வெளியானது
மேலும் யாருடைய கண்விழி, கைரேகை பொருந்தும் என அறிந்து அவர்களை அழைத்து வந்து கதவை திறப்பதற்காக அலுவலர்கள் காத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய 40 இடங்களில் ரெய்டு!