திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆரணியை அடுத்த ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த புவனேஷ்குமார் (29) ஆரணி பாஜக நகரத் தலைவராகச் செயல்பட்டுவருகிறார். இவர், கடந்த 30ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், "நான் எம்எல்ஏ சீட் கேட்டு அதிமுக வடசென்னை மாவட்ட நிர்வாகி விஜயராமனை அணுகினேன். அவர் எம்எல்ஏ சீட் குறித்து பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமனிடம் தெரிவித்தார். அவர்கள் இருவரும் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில், முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை நான் கொடுத்தேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்
மேலும், ஆரணியில் தனக்குச் சீட் ஒதுக்கப்படாத நிலையில், திருவண்ணாமலையில் நிற்க தனது சகோதரிக்கு வாய்ப்பு கொடுக்குமாறு வலியுறுத்திய புவனேஷ்குமார், அவரது சகோதரிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கொடுத்த பணத்தை நரோத்தமனிடம் கேட்டுள்ளார்.
நரோத்தமன் பணத்தைத் தர மறுப்பதோடு கொலை மிரட்டல் விடுத்துவருவதாக புவனேஷ்குமார் தனது புகாரில் கூறியிருந்தார்.
இந்தப் புகார் தொடர்பாக சட்ட ஆலோசனைப் பெற்று தற்போது பாண்டி பஜார் காவலர்கள் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, அதிமுக நிர்வாகி விஜயராமன், அவரது மகன் சிவபாலாஜி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது