சென்னை : ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் மயிலை வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்து சமய அறநிலைய துறை, சுற்றுலாத் துறை, மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தின் போது பேசிய மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் மயிலை த.வேலு கூறுகையில், “திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை ஆன்மிகத்திற்கு எனப் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மிகத்திற்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் செயல் மூலம் திராவிட இயக்கத்தின் சாமியாக நான் முதலமைச்சரை பார்க்கிறேன்.
மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே உள்ள மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதுடன் குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக தனியார் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடுவதை கட்டாயப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாநிதி கனவை நிறைவேற்றும் வகையில் மீண்டும் சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டத்தை சட்டப்பேரவை வளாகமாக மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க : விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்