திமுக பொதுச்செயலாளராக நீண்ட காலமாக பதவி வகிப்பவர் க. அன்பழகன். பல்வேறு காலங்களில் தமிழ்நாட்டின் நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ள இவரை திமுகவினர் ‘பேராசிரியர்’ என்று அழைப்பது வழக்கம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைவிட ஒரு வயது மூத்தவரான இவர், கருணாநிதி உயிருடன் இருந்தவரை கட்சி பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றிவந்தார். இந்நிலையில், அவரின் மறைவுக்குப் பின்னர் இவரது உடல்நிலை மங்கத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் வீட்டில் முடங்கிய இவர், கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தார். இருப்பினும் திமுகவின் பொதுச்செயலாளராகவே அன்பழகன் தொடர்ந்து நீடித்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்களுடன் ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனையில், திமுகவின் முக்கிய நிர்வாகிகள், அன்பழகன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.