இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா எல்லைகள் தொடர்பான பிரச்னை கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வருகிறது. பாங்கோங் த்சோ ஏரியில் சீன படையினர் அத்துமீறி நீர்வழி ரோந்து பணிகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்தன. இதனிடையே, அந்த ஏரியின் அருகே இந்தியா - சீனா வீரர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, லடாக் எல்லைப்பகுதியில் சீனா தனது ராணுவத்தை கடந்த மாதம் குவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை குவித்ததால் இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, எல்லையில் இருக்கும் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
லடாக்கிலுள்ள படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது நேற்றிரவு (ஜூன் 15) இரு தரப்பு ராணுவத்திற்குமிடையே மோதல் ஏற்பட்டது. கால்வான் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் மூன்று இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். மேலும், அவர்களில் ஒருவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு பழனி 22 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார்.
பழனியின் மரணத்திற்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய ராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்.
22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி, தனது உயிரையும் ஈந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு வீரர் உயிர் நீத்தது மிகுந்த வேதனை அளிக்கிறது- முதலமைச்சர் பழனிசாமி