சென்னை: மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி மம்தா பானர்ஜி பரப்புரை மேற்கொண்டதாக பாஜக அளித்த புகாரின்பேரில் தேர்தல் ஆணையம் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் விளக்கம் அளிக்குமாறு கூறியிருந்தது.
இது தொடர்பாக மம்தா அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை எனக்கூறிய தேர்தல் ஆணையம் இன்று இரவு 8 மணிவரை அவர் பரப்புரை மேற்கொள்ள தடைவிதித்து உத்தரவிட்டது. இதனை ஏற்க மறுத்த மம்தா இன்று நண்பகல் 12 மணிக்குத் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் மம்தா பரப்புரை மேற்கொள்ள தடைவிதித்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், "நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சுதந்திரமான, நியாயமான தேர்தல்களில் அடங்கியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் ஒரே நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். பக்கச்சார்பற்ற தன்மையையும் நடுநிலையையும் உறுதிசெய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மேலும், ட்வீட்டில் மம்தா பானர்ஜியின் பெயரையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.