இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகளை சேமிக்க (Away From Reactor- AFR) வசதியை ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்திட வேண்டும் என்று 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் காலம் தாழ்த்தியது மட்டுமின்றி, தற்போது கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவுகள் சேமிப்புக் கிடங்கினை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாகவும், இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல் என்றும் மிக காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கூடங்குளத்தில் நிரந்தர கழிவு மையம் அமைப்பது தொடர்பான தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும் என்ற ‘பூவலகின் நண்பர்கள்’ அமைப்பின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், ஜூலை 10ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் பொதுமக்கள் “கருத்துக் கேட்புக் கூட்டம்” நடைபெறும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் நன்கு நினைவில் கொண்டு மக்களின் பாதுகாப்பையும், சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே AFR கட்டும் முடிவினை உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.