தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வருவாய் துறை , தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது பாமகவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜி.கே. மணி பேசுகையில், "தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதை பொருள்கள் விற்பனை நடைபெறுகிறது. சமூகத்தை பாதுகாக்கும் விதமாக போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு; 81 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 143.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் முன்பு போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, குற்றம் செய்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.