இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 36,000 ஆக இருந்தார்கள். இது 50,000 ஆகும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
ஆனால் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15,000க்கும் கீழ் குறைந்துகொண்டு வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இல்லை என்பது மாதிரியான நிலைமை இப்போது இல்லை.
தமிழ்நாடு அரசு பல்வேறு முனைகளில் எடுத்த முயற்சிகளின் காரணமாகத்தான் இரண்டு வாரக் காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்திருக்கிறது.
ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிற சங்கிலியை முதலில் உடைத்தாக வேண்டும். அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம்.
ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி!. தளர்வு அறிவித்ததற்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும்.
அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் அதை முழுமையாக பின்பற்றினால்தான் முழுமையான வெற்றி சாத்தியம். கரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கைகள் வந்தன; மக்களின் எண்ணங்களைத்தான் அரசு செயல்படுத்தி வருகிறது.
கரோனா கால கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்பப் பெறப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அலுவலர்களுக்காக ரூ.11 கோடியில் 32 சொகுசு கார்கள்: அரசுக்கு கடும் கண்டனம்!