வரும் ஜனவரி 3ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், தொண்டர்கள் விரும்பினால் நிச்சயம் கட்சித் தொடங்குவேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி, அண்மைக் காலமாக புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், வரும் தேர்தலில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்றும் பரபரப்பான கருத்துகளைக் கூறிவந்தார்.
தயாளு அம்மாளிடம் ஆசி
இந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் உள்ள தனது தாயாரான தயாளு அம்மாளிடம் ஆசிபெற்று விட்டு செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. அழகிரி, "வரும் தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும், வாக்களிப்பதும் ஒருவகையான பங்களிப்புதான்.
வரும் 3ஆம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். தொண்டர்கள் விரும்பினால் நிச்சயம் கட்சித் தொடங்குவேன்.
ரஜினியை சந்திப்பேன்
ரஜினிகாந்த் சென்னைக்கு வந்தால் அவரை நிச்சயம் சந்திப்பேன். தற்போது கரோனா தொற்று காலம் என்பதால் பிறந்த நாளன்று அவரைச் சந்திக்க முடியவில்லை. ரஜினியை விரைவில் நேரில் சந்திப்பேன்" என்று தெரிவித்தார்.
திமுகவிலிருந்து அழைப்பு இல்லை
மேலும், திமுகவில் தலைமையிடம் இருந்து தனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்றும், இதனால் திமுகவுடன் இணைந்து தேர்தல் பணி செய்ய வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!'