சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் காணாமல் போன நிலையில், கடந்த செப்.14 ஆம் தேதியன்று மியான்மர் கடற்பகுதி அருகே அவர்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களை மியான்மர் நாட்டு கடற்படையினர் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், தனிப்பட்ட நிகழ்வில் காணாமல் போன மீனவர் பாபுவை தேடும் பணி, மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், எட்டு மீனவர்கள் நேற்று (அக்.7) விமானத்தின் மூலம் மியான்மரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது பயணிகள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட மீனவர்களை மாதவரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, காசிமேட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயமாகினர். அவர்களை மீட்கக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவு அலுவலர்களிடம் அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், மியான்மர் நாட்டு கடற்படையினர் காசிமேடு மீனவர்களை மீட்டு மியான்மரில் பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களுக்கு உணவுகளை கொடுத்துள்ளனர். திமுக வட சென்னை சார்பாக மீனவர் குடும்பத்திற்கு நிதிகளை வழங்கி உள்ளோம். அவர்களுக்கு தொடர்ந்து ஆறுதலையும் கூறி வந்தோம். தற்போது மீனவர்கள் பாதுகாப்பாக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடலுக்கு செல்ல பயன்படுத்திய படகுகளில் ஜிபிஎஸ் கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். மீனவர்களின் நலன் காக்க தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான உபகரணங்களை செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடலுக்குள் சென்ற பிறகு அவர்களை தொடர்புகொள்ள தரம்வாய்ந்த உபகரணங்களை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்து வருகிறார்.
ஆகவே தமிழ்நாடு அரசு மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். பாதுகாப்பாக மீட்கப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட மீனவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம் அவர்களுக்கு எப்போதும் துணையாக திமுக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காணாமல் போன தமிழ்நாட்டு மீனவர்கள் மியான்மரிலிருந்து இந்தியா திரும்பினர் !