உத்தரப் பிரதேசம், லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார். இவரின் தந்தை ஓம் பிரகாஷ் குப்தா (62), ரயில்வே ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பாக லக்னோவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன ஓம் பிரகாஷ் குப்தாவை தொடர்ந்து குடும்பத்தார் தேடி வந்துள்ளனர்.
இதனிடையே சென்னை, பாண்டி பஜார் குற்றப்பிரிவு ஆய்வாளர் தாஹிரா, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியை ஏடிஜிபி சீமா அகர்வாலின் மேற்பார்வையில் செய்து வந்தார்.
இதுவரை காணாமல் போன 300 பேரைக் கண்டுபிடித்து குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த பெருமையும் ஆய்வாளர் தாஹிராவிற்கு உண்டு. இந்நிலையில், இவருக்கு உள்ள தொடர்புகள் மூலம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் குணமடைந்த ஒருவர் குடும்பத்துடன் சேர விரும்புவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் தாஹிரா விசாரணை மேற்கொண்டதில், அவரின் பெயர் ஓம் பிரகாஷ் குப்தா என்பதும், உத்தரப் பிரதேசம், லக்னோவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக லக்னோவில் உள்ள காவல் நிலையத்திற்கும், அவர்கள் மூலம் அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இ-பாஸ் பெற்று நேற்று (மே.21) ராமேஸ்வரம் வந்தடைந்த ஓம் பிரகாஷ் குப்தாவின் மகன் சந்தீப், தந்தையை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். பின்னர் தந்தையைக் கண்டுபிடிக்க உதவிய ஆய்வாளர் தாஹிராவிற்கு சந்தீப் நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அவர்களை ஆய்வாளர் தாஹிரா வழியனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: கருப்பு பூஞ்சை தொற்று பாதித்து நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி!