சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது தங்கையின் பி.எட் கலந்தாய்வுக்காக, ஆகஸ்ட் 13ஆம் தேதி மனைவி பானு மற்றும் 4 வயது குழந்தை விசாகா ஆகியோர் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்லூரிக்கு சென்றனர். கலந்தாய்வு முடிந்து இரவு நேரத்தில் அவரது தங்கை மட்டும் வீடு திரும்பியுள்ளார். மனைவியும், மகளும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால், பதற்றமடைந்த சம்பத்குமார் இதுகுறித்து தங்கையிடம் கேட்டபோது, மாலையே கலந்தாய்வு நடக்கும் இடத்தில் இருந்து கிளம்பியதாக தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு சென்றிருக்கலாம் என நினைத்து, அவரும் தனது மனைவி குழந்தையை தேடாமல் இருந்துள்ளார். நீண்ட நாட்களாகியும் மனைவி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த சம்பத்குமார், மெரினா காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பானுவின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பானு அவருது சொந்த ஊரான திண்டிவனத்திற்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சி.சி.டிவி மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து காணாமல் போன பானுவையும், குழந்தையையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.