சென்னை: மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்புப்பகுதியில் மூன்று பேர் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, அவர்கள் கையில் வைத்திருந்த காகிதப்பையில் இருந்து ஒரு பொருள் கீழே விழுந்துள்ளது. விழுந்த நொடி கடப்பதற்கு முன்னதாக, அப்பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்துச்சிதறியது.
திடீரென கேட்ட இந்த சத்தத்தால், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அருகில் அமைந்துள்ள தேநீர் கடையில் இருந்த கண்ணாடி நொறுங்கியது. இவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தையடுத்து, பைக்கில் வந்த மூன்று பேரும் தப்பிச்சென்றனர். உடனடியாக, இதுகுறித்து மாங்காடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சிறிது தூரத்தில் காலில் பலத்த காயங்களுடன் ஒருவர் படுத்திருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், காயமடைந்த நபர் ஐயப்பன்தாங்கலை சேர்ந்த வினோத்குமார்(27) என்பது தெரிய வந்தது.
சரித்திரப்பதிவேடு குற்றவாளியான வினோத் குமார், தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது காகிதப் பையில் எடுத்துச்சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்ததில் காயம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேநேரம், வினோத் குமாருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவருடன் வந்தவர்கள் தப்பிச்சென்று விட்டதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காயமடைந்த வினோத் குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், இவர்கள் யாரையாவது பழி தீர்க்கவும், சதித்திட்டம் தீட்டவும் நாட்டு வெடிகுண்டை எடுத்துச்சென்றார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பூந்தமல்லி அருகே பப்ஜி விளையாட்டு தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது