டெல்லியில் கடந்த ஐந்து நாட்களாக குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸ் இந்தியா ஏசியா என்ற போட்டி நடைபெற்றது. இதில், 150க்கும் மேற்பட்ட மாடலிங் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த பாஷினி பாத்திமா மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார்.
மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட பாத்திமாவுக்கு நேற்று சென்னை விமான நிலையத்தில் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிஸ் இந்தியா பட்டம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் தான் இந்தப் பட்டத்தை வெல்வதற்கு தனது குடும்பத்தினர், நண்பர்கள் மாடலிங் துறையில் தன்னை ஊக்கப்படுத்தியவர்களுமே காரணம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டுப் பெண்கள் மாடலிங் போட்டியில் பங்கேற்கத் தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்கு இந்தத்துறையின் மீது உள்ள தவறான எண்ணங்கள் தான் காரணம். அந்த எண்ணம் மாறி தமிழ்நாட்டிலிருந்து அதிகளவில் பெண்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெறவிருப்பதாகவும் பாத்திமா தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாசாவுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு உதவிக் கரம் நீட்டுமா அரசு!