சென்னை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 13) அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களாவில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையானது, 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, நுங்கம்பாக்கம் அழைத்துச் செல்லும் வழியில் செந்தில் பாலாஜிக்கு காரில் வைத்து நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் திமுக எம்பியும் வழக்கறிஞருமான என்ஆர் இளங்கோ, அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அமலாக்கத்துறை இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், எதுவாயினும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும், பாஜக தலைமையிலான மத்திய அரசின் மிரட்டல் அரசியலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “செந்தில் பாலாஜி குறி வைத்து துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையினர் தொடர்ந்து 24 மணி நேரமும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த செயல் முற்றிலும் மனித உரிமைகளுக்கு எதிரானது. ஆகவே, அமலாக்கத் துறையினர் மக்களுக்கும், நீதிமன்றத்துக்கும் பதில் சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
அதேபோல், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், “மேற்கு வங்கம், டெல்லி போன்ற பாஜக ஆளாத மாநிலங்களில் இது போன்ற பல தவறான செயல்களை மத்திய அரசு செய்து வருகிறது. இது ஒரு பழிவாங்கும் செயலாக நான் பார்க்கிறேன்.
இவர்களைத் தவிர, அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அது மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதையும் படிங்க: NR Elango: செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதிக்கவில்லை - என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு