சென்னை: அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்கில் 'மாமனிதன் வைகோ தி ரியல் ஹீரோ' என்ற ஆவணப்படம் 41ஆவது முறையாக திரையிடப்பட்டது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, "திமுக மாநாடு என்றால் கருணாநிதி மற்றும் வைகோ பேச்சைக் கேட்கவே கூட்டம் கூடிவிடும். அதில் நானும் ஒருவராக சென்று பேச்சைக் கேட்பேன். அந்த அளவிற்கு தமிழர்களின் உரிமைகளுக்காக மேன்மைக்காக போராடக்கூடிய தலைவர்களாக வைகோ இருந்து வருகிறார்" எனக் கூறினார்.
இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இது ஒரு மிகச்சிறந்த ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வைகோ இந்தியாவின் 9 பிரதமர்களை சந்தித்து தமிழர்களின் நலன்காக்க பல்வேறு சட்டங்கள், திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு காரணமாக இருந்துள்ளார்’’ என்றார்.
இறுதியாக பேசிய மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, "இந்த ஆவணப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டது. தற்போது 41ஆவது முறையாக இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்நாட்டு மக்களுக்காக செய்த தியாகம் மற்றும் மக்களின் உரிமைகளுக்காக போராடிய போராட்டம் குறித்து எல்லாம் தமிழ்நாடு மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மதிமுக இழந்ததை வென்றெடுக்கும் போது இரண்டாவது ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய துரை வைகோ, "ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்ட மசோதா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு 35 நபர்கள் மரணம் அடைந்துள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற கூட்டணி குறித்து சூசகமாக பதிலளித்த கமல்ஹாசன் - வெளியான முக்கிய தகவல்