சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள அம்மா மாளிகையில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், காவல் துறை உயர் அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுப்பணித் துறை, போக்குவரத்தத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், “வருமுன் காப்போம் என்ற முன்னெடுப்புக்கு ஏற்ப பல தடுப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. அது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய மக்களை எவ்வாறு கண்காணிக்க வேண்டும், எவ்வாறு சோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முறையாக சோப்பை பயன்படுத்தினால் 80 விழுக்காடு கரோனா வைரஸ் தடுக்க முடியும் என்று சுகாதாரத் துறை சொல்லியிருக்கின்றது. இதன்படி எவ்வாறு முறைப்படி கைகளைக் கழுவ வேண்டும் என்பதைப் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து பயிற்சி தரப்பட்டுவருகின்றது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக கரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.