சென்னை: நகர்ப்புற சுய உதவிக் குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், பயனாளர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ”நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா? மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம் மீண்டும் கேட்கிறேன், நான் என் சொந்த விருப்புக்காக கேட்கவில்லை. மக்கள் பெரும் பேரிடரை சந்தித்துள்ளனர் என்பதால்தான் கேட்கிறேன். இதை பேரிடர் என்றே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
பாஜகவின் ஒன்பதரை வருட ஆட்சியே ஒரு பேரிடர் என்பதால்தான், தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பேரிடர் என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட வந்த மத்தியக் குழு, வெள்ளத்தின்போது மாநில அரசின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளது. ஆனால், இவர்கள் அரசியல் ரீதியாக யோசிக்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இன்னும் சில இடங்களில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. அவர்கள் பாதிப்பில் இருந்து வெளியில் வரவில்லை. இதை மனதில் வைத்துக்கொண்டு நிதியைக் கொடுங்கள் என்று மீண்டும் மரியாதையுடன் கேட்கிறேன். அப்படி என்ன நான் அநாகரிகமாக பேசிவிட்டேன்? அப்பன் என்பது கெட்ட வார்த்தையா? மரியாதைக்குரிய மத்திய நிதியமைச்சரின் மரியாதைக்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா எப்படி வேண்டும் என்றாலும் அழைக்க நான் தயார்.
ஏரல் பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மூர்த்தி அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணி குறித்து தொடர் ஆய்வில் இருந்து வருகின்றனர். மீண்டும் நாளை (டிச.24), நான் அப்பகுதிகளுக்குச் செல்ல உள்ளேன். முதலமைச்சர் பிரதமரை பார்க்கவும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவும் சென்றார். அதுவும் முக்கியமான வேலைதான். அவர் மறுநாளே களத்திற்கு வந்துவிட்டார்.
வெள்ள பாதிப்புகளை தடுக்க சென்னையிலும் சரி, தென் மாவட்டங்களிலும் சரி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்தது" என்றார். தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் சரியான தகவலை கொடுத்திருந்தும் தமிழ்நாடு அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளது என்ற மத்திய நிதியமைச்சரின் கண்டனத்திற்கு பதிலளித்த அவர், "இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இது என் தவறு, உன் தவறு என்று கூற விரும்பவில்லை. அனைவரும் களத்தில்தான் இருந்தோம். அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டு அனைத்திற்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெளிவாக பதில் அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரம்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!