சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
குடிமராமத்து பணியின் மூலம் ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் கடுமையாக அகற்றி வருகிறோம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பிலிருந்து வருபவர்களை அங்கிருந்து அகற்றி மாற்று இடமளித்து அங்கு குடியமர்த்துகிறோம். அனைத்து நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதில் முதலமைச்சரும் உறுதியாக உள்ளார். பழமையான பழுதடைந்த கட்டடங்கள் உள்ளாட்சித்துறை , பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட அந்தந்த துறைகளின் சார்பில் கண்டறியப்பட்டு அகற்றப்படும்" என தெரிவித்தார்.