2019ம் ஆண்டிற்கான வருடாந்திர பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண பயிற்சி குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அவசர கட்டுப்பாட்டு அறையில், அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், எதிர்வரும் பேரிடர்களை எதிர்கொள்ள நிவாரண பயிற்சி நடத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி உள்ளனர். அதனடிப்படையில் முதலமைச்சர் ஆலோசனைப் படி பயிற்சி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் தவிர மற்ற கடலோர மாவட்டங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். மேலும் மத்திய அரசு அறிவுறுத்தல் படி பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.
புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்டவை தொடர்பாக இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று பேரிடர் பாதுகாப்பு, பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பு உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் அடங்கிய கண்காட்சி தொடங்கியது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை தேடல், மீட்பு மற்றும் தகவல் தொலைதொடர்பு சாதனங்கள் கொள்முதல் செய்ய 94 கோடியே 17 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் 66 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் 17 ஆயிரத்து 539 வி.எச்.எப். உபகரணங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், சென்னை தீவுத் திடலில் நடைபெற்றுவரும் பேரிடர் மீட்புத் துறையினரின் கண்காட்சியை பார்வையிட்டு மீட்புக் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.