காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக பேசிய அவர், நேற்றைய தினம் முதலமைச்சர் தலைமையில் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளக்கூடிய வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதன்படி 32 மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் அந்த இடங்களுக்கு மீட்புக் குழுக்கள் விரைவாக சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட ஏதுவாக 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், திருமண மண்டபங்கள் சமூக நலக்கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 'இன்று மாலைக்குள் 30ஆயிரம் கனஅடிநீர் மேட்டூர் அணைக்கு வரும் என்றும் அது படிப்படியாக உயர்ந்து 50ஆயிரம் கன அடியைத்தொடும்' என நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
எனவே அப்பகுதி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய விவசாயிகள் தங்கள் கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு மின் வழங்கல் பாதுகாப்பாக உள்ளதா என்பதை ஆராயவும் தேவைப்பாட்டால் மின்சாரத்தைத் துண்டிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.
இதையும் படிங்க: கர்நாடக அணைகளிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு