சென்னை: ரூ.7108 கோடி செலவில் 8 நிறுவனங்கள் புதிய தொழில் தொடங்குவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் துறைமுகங்களை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை 2023-க்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (அக்.31) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, தொழில் நடத்தும் நிறுவனங்களும், புதிதாக தொழில்களை நடத்தவும்; நிறுவனங்கள் ஒப்புதல் கேட்டு கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று 8 நிறுவனங்கள் புதிய முதலீடுகளை தொடங்க முன் முடிவுகளை அளித்து இருந்தனர்.
ரூ.7,108 கோடி முதலீட்டில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி: அவர்களுக்கான தொகுப்பு சலுகைகளை வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.7,108 கோடி முதலீடு செய்ய உள்ளனர். இதன் மூலம் 22,536 வேலைவாய்ப்பு உருவாகும். அதேபோல, இந்த நிறுவனங்கள் மின்சார வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள், கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க உள்ளனர்.
துறைமுகங்கள் மூலம் தொழில் நிறுவனங்களை ஈர்க்க திட்டம்: தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை 2023 உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் மேம்பாட்டு கொள்கையாக இருந்தது தற்போது, சிறு துறைமுகங்களாக இல்லாமல் அனைத்து துறைமுகங்களும் வளர்ச்சி அடையும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் இந்த துறைமுகங்கள் மூலம் தொழில் நிறுவனங்களை ஈர்க்க பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பெரிய கப்பல்களை நிறுத்துவதற்கான திட்டம்: அதற்கு ஏற்றவாறு பல்வேறு மாநிலங்களில் உள்ள புதிய கொள்கைகளை ஆய்வு செய்து, அதிலிருந்து இந்த கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. பெரிய கப்பல்களை நிறுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். இதற்கு தனியார் முதலீடுகள் தேவைப்படும் என்பதால் கடல் புறம்போக்கு நிலங்களை நீண்ட காலம் வாடகைக்கு விட இந்த கொள்கை வழி வகை செய்கிறது. திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆளுநர் மாளிகையில் அனுமதிக்கப்படாத மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நான் கூறியவை மட்டுமே அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என பதிலளித்தார். மேலும் தமிழ்நாட்டில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்டவைகள் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்கள் பங்கேற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்