சென்னை: செக் குடியரசு நாட்டில் சிறு குறு சர்வதேச கண்காட்சி ப்ரோனோ நகரத்தில் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்ட 10 பேர் கொண்ட உயர் அலுவலர்கள் குழு இன்று அதிகாலை பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த பயணத்தில், 4ஆம் தேதி செக் குடியரசு நாட்டின் விண்வெளி மற்றும் விமானத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கின்ற நிறுவனத்தை நேரில் பார்வையிடும் அமைச்சர், அதனைத்தொடர்ந்து அது தொடர்பான பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
அதனைத்தொடர்ந்து 5ஆம் தேதி ப்ரோனோ நகரில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொண்டு, செக் குடியரசு நாட்டின் சிறு குறு தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உண்டான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளது.
அதனைத்தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கின்ற நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாட்டில் சிறு குறு தொழில் துறையில் செக் குடியரசு நிறுவனங்கள் தொழில் தொடங்கும்பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாகவும், விரிவாக எடுத்துரைக்க உள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் ப்ரோனோ நகரில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் அரங்குகளையும் பார்வையிட உள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்கள் குழு வருகின்ற 8ஆம் தேதி அதிகாலை தமிழ்நாடு வந்தடைய உள்ளனர்.
இதையும் படிங்க:தூய்மையற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது அரசு - ஓபிஎஸ் கண்டனம்